தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு கட்டித்தர நடவடிக்கை : ஆணையத் தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

அனைத்து தூய்மைப் பணியாளர் களுக்கும் சொந்த வீடு கட்டித்தர அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரியில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் மறுவாழ்வு திட்டங்கள், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கிருஷ்ணகிரி நகராட்சி, ராசி வீதி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருவதையும், நேரடியாக வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப் படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை கட்டாயமாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் 100 சதவீதம் சொந்த வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அவர்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் நன்கு படித்து அரசு அலுவலர்களாக பணியாற்ற வேண்டும், என்றார்.

இக்கூட்டத்தில், டிஆர்ஓ., சதீஸ், திட்ட இயக்குநர் பெரியசாமி, ஏடிஎஸ்பி ராஜூ, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், ஆணையாளர்கள் ஓசூர் மாநகராட்சி செந்தில்முருகன், சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்