திருப்பூர் மாநகர நியாயவிலைக் கடைகள் மற்றும் கரோனா சிகிச்சைமையத்தில் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகரில் கருவம்பாளையம் மற்றும் ஆலங்காடுகூட்டுறவு மொத்த விற்பனை நியாயவிலைக் கடைகளில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை, இரண்டாம் தவணை ரூ.2 ஆயிரம் வழங்குவதையும், 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சர்க்கரை, அரிசி, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகள், மின்னணு எடை இயந்திரத்தின் செயல்பாடு மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து, குமரன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கான உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் உணவு முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
கிருமி நாசினி கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டுமென மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார்.ஆய்வின் போது, மாவட்ட வழங்கல்அலுவலர் கணேசன் உட்பட பலர்உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago