அரசு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி - பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தற்போது அரசு மதுக்கடைகளை திறந்துவருகிறது. இதனால் தொற்று மீண்டும்அதிகரிக்கும். எனவே மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாமக சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் வ.உமாபதி தலைமை தாங்கினார். அப்போது தமிழக அரசுக்கு எதிராக மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மாநில துணை அமைப்புச் செயலர் வரதராஜன், நகர செயலர்கள் மூர்த்தி, மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தின்போது பலர் கருப்புக் கொடி ஏந்தி இருந்தனர். பலர் வீடுகளுக்கு முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திலும் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், வண்டலூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாமகவினர் கருப்புக் கொடியுடன் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களின் பாமக சார்பில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் வீடுகள் முன்பு கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், பாமக துணை பொதுச் செயலாளர்களான பாலயோகி, கே.என்.சேகர், பிரகாஷ் மற்றும் மாநில துணை அமைப்புச் செயலாளர் வெங்கடேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தினேஷ், மாவட்ட செயலாளர்களான எம்.கே.பிரகாஷ், பூபதி, ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்று, மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்