ராணிப்பேட்டை மாவட்ட இலங்கை அகதிகள் முகாம்களில் - மாநில குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உரிமைகள் குறித்து மாநில குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வி.ராமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசினர் சிறுவர் இல்லம், சிறுவர் வரவேற்பு மையம், வாலாஜா அருகேயுள்ள பாலாறு அணைக்கட்டு மற்றும் பாணாவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வு நேற்று நடை பெற்றது. இங்கு, தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு, உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வி.ராமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பாலாறு அணைக்கட்டு முகாமில் வசிக்கும் 293 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 18 வயதுக்கு கீழ் 410 பேர் இருப்பது தெரியவந்தது. அதேபோல், பாணாவரத்தில் உள்ள முகாமில் 18 வயதுக்கு கீழ் 105 பேர் இருப்பது தெரியவந்தது. இவர்களிடம், மாநில குழந்தை பாதுகாப்பு, உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் நடத்திய விசாரணையில் இவர்களுக்கு பிறப்புச்சான்று இல் லாமல் இருப்பதும், அவர்களின் பெற்றோருக்கு திருமண பதிவு சான்று பெற முடியாத நிலையும், இந்தியா-இலங்கை என எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இலங்கையில் பிறந்து ஓரிரு மாதங்களில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு இலங்கையிலும் பிறப்புச்சான்று இல்லை என்பது தெரியவந்தது.

இது தொடர்பான அறிக்கையைஅரசுக்கு விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

இந்த ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சங்கீத், அரவிந்த், வாலாஜா சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்