கல்வியில் தனியார்மயம், வணிகமயத்தை ஒழிக்க வேண்டும் : கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கல்வியில் தனியார்மயம், வணிகமயம் போன்ற கேடுகளை ஒழிக்க வேண்டும் என, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருப்பூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தொழிற்கல்விப் படிப்புகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை குறைந்த அளவில் உள்ள நிலையே உள்ளது. இந்நிலையை சரிசெய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய,டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையத்தை அமைத்து முதல்வர்மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. இந்த ஆணையம்,அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள், சந்திக்கக்கூடிய கல்விஇடர்பாடுகள், கடந்த ஆண்டுகளில்பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளது.

அரசுப்பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலானோர் ஏழைகளாக உள்ளனர். தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கு கிடைக்கும் கற்றல் வாய்ப்புகள் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.

இதனால் 10-ம் வகுப்பு மற்றும்பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார்பள்ளி மாணவர்களைவிட அதிகமதிப்பெண் பெற முடிவதில்லை.இதன் விளைவாக, உயர் கல்விச் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சமமான போட்டிக்குவாய்ப்பற்ற நிலை உருவாகிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக இது மேலும் அதிகரித்துள்ளது.

தனியார் பள்ளி - அரசுப்பள்ளி, வசதியானவர்கள்- வசதியற்றவர்கள் என்ற அடிப்படையில் கல்வியில் ஏற்றத்தாழ்வு வளர்ந்துவிட்டது.

சமூக அநீதியை மூடி மறைக்கும் வகையில், உயர் கல்விச் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு எனும் சீர்திருத்த வழிமுறை மட்டும் நிரந்தரத் தீர்வாகஅமையாது. கல்வியில் தனியார்மயம், வணிகமயம் போன்ற கேடுகளை ஒழிப்பதே நிரந்தரத்தீர்வாகஅமையும். இதுகுறித்து ஆராயவும் அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்