நீலகிரி மாவட்டத்தில் நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 136 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த நான்கு நாட்களாக இடைவிடாத காற்றுடன், தொடர் சாரல்மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் சாலைகளின் நடுவே மரங்கள் விழுந்துள்ளன.
இவற்றை அகற்றி சீரமைக்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் மின் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளஅபாயம் உள்ள பகுதிகளை அரசு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மீட்புக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி மற்றும் அவலாஞ்சி போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது.
உதகை-இடுஹட்டி சாலையில் மரம் விழுந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மின் ரம்பத்தின் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர்.
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 136 மி.மீ. மழை பதிவானது.
பந்தலூர்- 73, பாடாந்தொரை-64, எமரால்டு-61, தேவாலா- 47, செருமுள்ளி- 46, சேரங்கோடு- 20, மசினகுடி- 20, கூடலூர்- 17, அப்பர் கூடலூர்- 17, ஓவேலி- 15, உதகை- 15.6, நடுவட்டத்தில் 12.5, குந்தா- 8, பாலகொலா- 6, கிளன்மார்கன்-6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago