காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
காஞ்சி மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மா.ஆர்த்தி நேற்று ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். செய்யாறு சார் ஆட்சியர், சுகாதாரத் துறைதுணைச் செயலர், உள்ளிட்டபொறுப்புகளை வகித்த மா.ஆர்த்தி, தற்போது தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர் மதுராந்தகத்தை பூர்வீகமாக கொண்டவர். பல் மருத்துவம் படித்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார்.
காஞ்சி ஆட்சியராக பொறுப்பேற்றதும் மா.ஆர்த்தி கூறியதாவது: காஞ்சி மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்தாலும், இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். பெருந்தொற்றை ஒழிக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தப்படும். மக்கள் குறைகளை எந்நேரத்திலும் கேட்டு, அதை நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறேன். இம்மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்ற அதிகாரிகளும், மக்களும் இணைந்து உதவ வேண்டும் என்றார்.
செங்கை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இம்மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இம்மாவட்டம் புதிதாக தொடங்கி இவர் 2-வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். ராகுல்நாத் ஏற்கெனவே தலைமைச் செயலகத்தில் பொதுத் துறை இணைச் செயலராக இருந்தவர்.
தமிழக அரசு, சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த பொன்னையாவை, நகராட்சி நிர்வாக இயக்குநராகவும், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையரான (சுகாதாரம்) டாக்டர்ஆல்பி ஜான் வர்கீஸை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2015-ல் தேவக்கோட்டை துணை ஆட்சியராகவும் 2018-ல் தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராகவும் இருந்தவர். 2019 முதல் பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago