திண்டுக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கத்திலேயே நீர்வரத்து அதிகரித்து வரதமாநதி அணை, மருதாநதி அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு கோடை மழை ஓரளவு பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவ மழையும் உரிய காலத்தில் தொடங்கியதால் அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.
குறிப்பாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரதமாநதி அணை நிரம்பி முழு கொள்ளளவை (66.47 அடி) எட்டியது. இதன் உபரி நீர் கண்மாய், குளங்களுக்கு திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 தினங் களுக்கு முன்பு கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி அடிவாரத்தில் உள்ள மருதாநதி நிரம்பி முழு கொள்ளளவை (72 அடி) எட்டியுள்ளது. இதன் உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதேபோல் மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பாலாறு பொருந்தலாறு அணை 48.03 அடி வரையிலும் (மொத்தம் 65 அடி), பரப்பலாறு அணை 74.55 அடி வரையிலும் (மொத்தம் 90 அடி), குதிரையாறு அணை 56.45 அடி வரையிலும் (மொத்தம் 80 அடி) நிரம்பியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்யும்பட்சத்தில் இந்த அணைகள் அனைத்தும் விரைவில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடக்கத்திலேயே அணைகள் நிரம்பும் அளவுக்கு நீர்வரத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச் சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago