இலங்கை கடல் பகுதியில் பழைய பேருந்துகளை இறக்குவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொய்தீன் கண்டனம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியை விட மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். மது விலக்கைச் செயல்படுத்துவதே எங்கள் கொள்கை. மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து குடியேறிய இஸ்லாமியர்களைத் தவிர,மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி காணப்பட்டுள்ளது. ஆனால், சட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் குடியுரிமைச் சட்டத்தை செயல் படுத்த, ஆட்சியர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து குடியேறிய முஸ்லிம்களில் தீவிர வாதிகளாகச் சந்தேகிப்போரைத் தவிர, மற்றவர்களுக்கு அரசியல் சட்டப்படி மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும்.
லட்சத்தீவில் மத்திய பாஜக அரசின் தவறான செயல்பாட்டால் அங்குள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடல்பகுதியில் பழைய பேருந்துகளை இறக்குவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இரு நாடுகளும் பேசி இதற்கு தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொருளாளர் ஷாஜகான், மாவட்டத் தலைவர் வருசை முகமது, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகி அப்துல் ஜப்பார் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago