கர்நாடகாவிடமிருந்து தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை கேட்டுப் பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
திருவாருர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் கரோனா தொற்றாளர்களுக்கான உணவுப் பொருட்களை அதிமுக சார்பில் நேற்று வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக இரட்டைத் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள புகழேந்தி உள்ளிட்டவர்கள் பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தமிழக அரசு பதவியேற்று 40 நாட்களே ஆவதால், கோரிக்கைகளை மட்டுமே வைத்து வருகிறோம். அவற்றை நிறைவேற்றினால் பாராட்டுவோம். நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து வலியுறுத்துவோம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பிறகும் நிறைவேற்றவில்லை என்றால் விமர்சனம் செய்வோம்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக தற்போது கல்லணை திறக்கப் பட்டுள்ளது. இந்த நேரத்தில் காவிரி நதிநீர் ஆணைய கூட்டமும் நடைபெற இருக்கிறது. எனவே, ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் வலியுறுத்தி கர்நாடகாவிடமிருந்து தமிழகத்துக்கான தண்ணீரைப் பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார். மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் கோபால், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத் தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago