நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாளர்கள் லஞ்சம் பெற்றால் நடவடிக்கை : உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

உணவுப் பொருள் மற்றும் பொது விநியோகம், நெல் கொள்முதல் ஆகியன தொடர்பாக திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, ‘‘பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்துப் பொருட்களும் தரமானதாக வழங்க வேண்டும்’’ என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, ‘‘விவசாயிகள் கோரும்பட்சத்தில் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில், கூட்டுறவு, உணவுப் பொருள் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நஜிமுதீன், ஆணையர் ஆர்.ஆனந்தகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் வி.ராஜாராமன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநர் ஏ.சிவஞானம், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, ரங்கம் எம்எல்ஏ எம்.பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றுமாலை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு கொறடா கோவி.செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள எம்எல்ஏக்கள், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பணியாளர்கள் லஞ்சம் வாங்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்