திருப்பத்தூரில் அனுமதியின்றி திறக்கப்பட்ட 2 ஜவுளிக் கடை களுக்கு வருவாய்த் துறையினர் நேற்று 'சீல்' வைத்தனர்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் கடைகளை காலை முதல் மாலை வரை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஜவுளிக்கடைகள், நகைக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்காத நிலையில், திருப்பத்தூர் ஜின்னாரோட்டில் உள்ள 2 பெரிய ஜவுளிக்கடைகள் விதிமுறைகளை மீறி திறந்து வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்து ஜவுளி வியாபாரம் செய்து வருவதாகவும், சமூக இடைவெளியின்றி அங்கு பொதுமக்கள் அதிக அளவில் கூடியிருப்பதாக திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் குமரன், தணிகாசலம் மற்றும் வருவாய்த் துறையினர் ஜின்னாரோட்டில் ஆய்வுக்கு சென்றனர்.
அதிகாரிகள் வருவதை முன்கூட்டிய அறிந்துக்கொண்ட ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை கடையின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இருப்பினும், ஜவுளிக்கடை உரிமையாளரை வரவழைத்து கடையை திறந்து பார்த்தபோது உள்ளே 30-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கையில் துணி பைகளுடன் நின்றிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து விதிமுறை களை மீறி திறக்கப்பட்ட 2 ஜவுளிக்கடைகளுக்கு வருவாய் துறையினர் பூட்டி 'சீல்' வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago