திருப்பூர் மாவட்டத்தின் 7-வது ஆட்சியராக, கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் வினீத் இன்று (ஜூன் 16) பொறுப்பேற்க உள்ளார்.
2009-ம் ஆண்டு பிப்.22-ம் தேதிகோவையில் இருந்து பிரிந்து, திருப்பூர் தனி மாவட்டமானது. சமயமூர்த்தி முதல் ஆட்சியராக பணியைத் தொடங்கினார். அதன்பின்னர், மதிவாணன், கோவிந்தராஜ், ஜெயந்தி, பழனிசாமி ஆகியோர் பணியாற்றினர். கடந்த 2019-ம்ஆண்டு செப். 25-ம் தேதி முதல் க. விஜயகார்த்திகேயன் ஆட்சியராக பணியைத் தொடங்கினார். பதவியேற்க வரும்போது, திருப்பூர் வருவ தாகக் கூறி வீடியோ வெளியிட்டவர், அதன்பின்னர் தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகள் கேட்பது உட்பட பலவற்றையும் சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிவிட்டு, சமூக வலைதளத்தை பின்பற்றும் பலரின் நெருங்கியத் தொடர்பில் இருந்தார்.
இதனை அறிந்த பலரும், ட்விட்டரில் குறைகளை தெரிவிக்க தொடங்கினர். உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு ஆட்சியராக பணியாற்றினார். அதேபோல் கரோனா முதல் அலை, தற்போதைய இரண்டாம் அலையில் மாவட்டத்தில் பணியாற்றினார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் க.விஜயகார்த்திகேயன் பணியிடம் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, மின்சார உற்பத்திமற்றும் தொடர் அமைப்பு கழக இணை நிர்வாக இயக்குநராக இருந்த வினீத், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
வினீத் பள்ளிப்படிப்பை கேரளமாநிலம் கொல்லத்தில் முடித்துள்ளார். திருவனந்தபுரத்தில், மருத்துவம் பயின்ற வினீத், காசர்கோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர், 2013-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.அதன்பின்னர் தமிழகத்தில் ராமநாதபுரம் தொடங்கி பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் 2017-ம் ஆண்டு சார் ஆட்சியராக பணியாற்றிய வினீத், அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில், தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல், பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தார்.
கரோனா தொற்று தீவிரமுள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது. இதன் எண்ணிக்கை படிப்படியாக தற்போது குறைந்தாலும், முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்து இயல்பு வாழ்க்கையை எப்போது வாழத் தொடங்குவோம் என்பது மாவட்ட மக்களின்எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல், தீர்க்க முடியாமல் இருக்கும் விவசாயம், தொழிலாளர்கள் எனபலரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர், திருப்பூர் தொழிலாளர்களும், விவசாயிகளும். புதிய ஆட்சியர் மருத்துவர் வினீத், திருப்பூர் மாவட்டத்தின் 7-வது ஆட்சியராக, இன்று (ஜூன் 16) பொறுப்பேற்க உள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago