செங்கை, காஞ்சி, திருவள்ளூர்மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழக அரசின் 2-ம் கட்ட கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரத்துடன் கூடிய 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் பணிகளை, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர் நேற்று தொடங்கி வைத்தனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்குவதில் 2-ம்கட்டமாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் பணிகளை நேற்றுசெங்கை மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நால்வார்கோயில் பேட்டை பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில் ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகை மளிகை பொருட்களை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்..
காஞ்சி மாவட்டத்தில், ஓரிக்கை பகுதியில் உள்ள நியாய விலை கடையிலும் கரோனா நிவாரணப் பொருள் வழங்கும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும், குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவருக்கு நலவாரிய அடையாள அட்டை மூலம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில்கரோனா நிவாரண உதவி தொகையாக 30 திருநங்கைகளுக்கு தலா ரூ.2ஆயிரம் நிதி உதவி வழங்கப் பட்டது.மேலும், சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் காஞ்சி மாவட்டத்தை சேர்ந்த 52 பயனாளிகளுக்கு, இலவச மின் மோட்டார் வசதியுடன் கூடிய தையல் இயந்திரங்களும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் திருமண நிதி உதவி திட்டத்தின்கீழ் 300 பயனாளிகளுக்கு ரூ.78.25 லட்சம் நிதி உதவி மற்றும் ரூ.1.17 கோடி மதிப்பில் தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் எழிலரசன், சுந்தர், பாலாஜி, செல்வப்பெருந்தகை, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சந்திரசேகரன், மேலாண்மை இயக்குநர் லோகநாதன், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி விஜயகுமார், திமுக நகரச் செயலாளர் யுவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் தாம்பரம் தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்பு பொருட்களை வழங்கினார்.
இதேபோல் பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இ. கருணாநிதியும், சோழிங்கநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதியில் எஸ்.அரவிந்த் ரமேஷ் பெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர்.
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 1,133 நியாய விலைக் கடைகளில் 5,89,755 குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.இப்பணியை திருநின்றவூர்- நாச்சியார்சத்திரம் கூட்டுறவு நியாய விலைக் கடையில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ஜெய மற்றும் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், பூந்தமல்லி, திருத்தணி, பொன்னேரி எம்எல்ஏக்களான கிருஷ்ணசாமி, சந்திரன், துரை.சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago