தூத்துக்குடி, நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் 2-ம் கட்டமாக - ரூ.2,000 நிவாரணம், 14 மளிகை பொருட்கள் விநியோகம் : கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 960 நியாயவிலைக் கடைகளில் 5,01,947 குடும்ப அட்டைகளுக்கு 2-ம் கட்ட கரோனா நிவாரண நிதி தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.100 கோடியே 38 லட்சத்து 94 ஆயிரம் மற்றும் ரூ.20.20 கோடி மதிப்பீட்டில் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

இவற்றின் விநியோகத்தை மேல ஆத்தூர், சேதுக்குவாய்த்தான், சிவகளை, பேட்மாநகரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கனிமொழி எம்.பி., தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும், தூத்துக்குடி பூபாலராயர்புரம் நியாயவிலைக் கடையில் எம்பி மற்றும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோரும் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு மையத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு கரோனா தடுப்பூசி முகாமை எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா, ஆட்சியர் கி.செந்தில் ராஜ் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

கோவில்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட லிங்கம்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி பயனாளிகளுக்கு மளிகை தொகுப்பு மற்றும் 2-ம் கட்ட கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை வழங்கி னார். நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை பெருமாள்புரத்திலுள்ள ரேஷன் கடையில் நிவாரணம் வழங்கும் பணியை ஆட்சியர் வே.விஷ்ணு, சட்டப்பேரவை உறுப்பினர் மு.அப்துல்வகாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இதற் காக நியாயவிலைக் கடைகளில் டோக்கன் வழங்க ப்பட்டு, தினமும் 100 பேர் வரை நிவாரணத் தொகை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில், 776 ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு விநியோகம் தொடங்கியது. காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க வளாகத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் இப்பணியைத் தொடங்கி வைத்தார்.

அவர் கூறும்போது, ``மாவட்டத்தில் 5,94,834 குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். கரோனா பரவலைத் தடுக்க அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்றார்.

கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சொர்ணராஜ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுப்பையா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்