நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவுமுதல் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி செல்லும் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் மின் கம்பங்கள் சேதமடைந்தன.
இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து எடப்பள்ளி, வண்டிச்சோலை, அட்டடி, பெள்ளட்டிமட்டம் ஆகிய பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு குன்னூர்தீயணைப்புத் துறையினர், மின்சாரதுறையினர் ஆகியோர் சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பர்பவானி, கோரகுந்தா பகுதிகளில் பலத்த காற்றால், சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.
குந்தா, உதகை வட்டத்தில் தென்மேற்கு பருவ மழை கூடுதலாக பெய்யக்கூடும் என்பதால், அங்குள்ள 56 பேரிடர் பகுதிகளில் வருவாய் , நெடுஞ்சாலை உட்பட பல்வேறு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தீயணைப்பு த்துறை மாவட்ட அலுவலர் ஆர்னிஷாபிரியதர்ஷினி கூறும்போது, "தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள தேவையான உபகரணங்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்றார். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 80 மி.மீ., அப்பர்பவானியில் 65 மி.மீ., தேவாலாவில் 65 மி.மீ., பந்தலூரில் 47 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago