திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஆழ் துளைக் கிணறு பாசனம் மூலம் 15 ஆயிரம் ஹெக்டேரில் கோடை குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற் போது அறுவடைப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை நெல்லை கொள்முதல் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் பெரும் சிரமத் துக்கு உள்ளாகி வருகின்றனர். இதைத் தவிர்த்து, நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூப்பாச்சிக்கோட்டை விவசாயி பொன்முடி கூறியது: மன்னார்குடி அருகே கூப்பாச்சிக் கோட்டை, பரவாக்கோட்டை, கீழ திருப்பாலக்குடி, கண்டிதம் பேட்டை, உள்ளிக்கோட்டை உட்பட மாவட்டத்தின் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் கொள்முதலுக்காக 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது அடிக்கடி மழை பெய்துவரும் நிலையில், கொள்முதல் நிலையங்களில் போதிய அளவு தார்ப்பாய்கள் இல்லாததால், நெல்மணிகளை மூடி பாதுகாக்க முடிவதில்லை. அவ்வாறு மூடிவைத்தாலும், புழுக்கத்தால் ஈரப்பத அளவு கூடுகிறது. எனவே, கூடுதல் ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிலிருந்த சுமைப்பணி தொழிலாளர்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சுமைப்பணி தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல் உலர்த்தும் இயந்திரம், மூட்டைகளை ஏற்றி இறக்கும் இயந்திர வசதியை ஏற்படுத்த வேண்டும்.
சாகுபடி பணி தொடங்கியபோது வங்கிக் கடன், இன்சூரன்ஸ் போன்ற காரணங்களுக்காக பெறப்பட்ட சிட்டா அடங்கலை ஏற்காமல், கொள்முதல் பணியின்போதும் புதிதாக சிட்டா அடங்கலை வாங்கி வரும்படி விவசாயிகளை கொள்முதல் பணியாளர்கள் நிர்பந்திப்பதாலும் கொள்முதல் காலதாமதமாகிறது. இதைத் தவிர்த்து, நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago