திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இதற்கிடையே பல்வேறு பகுதிகளில் அதிகளவில் மக்கள் திரண்டு,அதற்கேற்ப தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும், தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாநில சுகாதாரத்துறை மூலமாக2 ஆயிரத்து 500 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தடைந்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அவை பிரித்து அனுப்பப்பட்டு, நேற்று முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதையறிந்த பொதுமக்கள் பலரும் பல்வேறு இடங்களில் அதிகளவில் திரண்டனர்.
வேலம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், போலீஸார் டோக்கன் விநியோகம் செய்தனர்.
இதுதொடர்பாக தடுப்பூசி செலுத்த சென்ற பொதுமக்கள் கூறும்போது, "ஒரு வாரமாக காத்திருந்து மகிழ்ச்சியுடன் தடுப்பூசி செலுத்த சென்றோம்.
நீண்ட நேரம் காத்திருந்தும் தடுப்பூசி செலுத்த முடியவில்லை. அதேபோல, எங்களில் சிலர்கோவிஷீல்டு முதல்தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தனர். ஆனால் தற்போது கோவாக்சின் அதிகமாக செலுத்தப்பட்டதால், கோவிஷீல்டு இரண்டாம் தவணைசெலுத்த பலரும் சிரமமடைந்துள்ளோம்" என்றனர். பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் சென்றதால், பல்வேறு இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
உதகை
நீலகிரி மாவட்டத்திலும் இருப்புஇல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், கேத்தி மற்றும் முத்தோரை பாலாடா பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது. பாலாடா பகுதியில் 579 கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டது.இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘நீலகிரி மாவட்டத்துக்கு கரோனா தடுப்பூசி மருந்து வந்ததும், அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து அளிக்கப்படுகிறது. கிடைக்கும் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படுகிறது. வரும் 21-ம் தேதி முதல் தடுப்பூசி மருந்து விநியோகம் சீராகி மக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்" என்றனர். உதகையை அடுத்த முத்தோரை பாலாடா பகுதியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேற்று ஆர்வமுடன் வந்த பொதுமக்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago