வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் இருந்து - கடன் தவணை திரும்ப பெறுவதை 12 மாதங்களுக்கு தள்ளி வைக்கவும் : நுண்நிதி நிறுவனங்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சுயஉதவிக் குழுக்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன் தொகையை திரும்பச் செலுத்தும் காலத்தை 12 மாதங்கள் தள்ளி வைக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் (micro finance institution) மூலம் பெற்றுள்ள கடன்களை நெருக்கடி கொடுத்து வசூலிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அனைத்து வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களுக்கும் கடந்த 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சுயதொழில் செய்பவர்கள் வங்கிகள் மற்றும் தனியார் நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றுள்ளனர். தற்போது கரோனா ஊரடங்கால் கடன் தொகையை திரும்பச் செலுத்தஇயலாத நிலையில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள், மகளிர்சுயஉதவிக் குழுக்கள் மற்றும்பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகையை வசூலிப்பதில் மிகக் கடுமையான போக்கினை கையாளுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வருகின்றது.

தமிழகத்தில் தற்போது கரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பாதிக்காத வகையில் தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. எனவே தற்போதுள்ள சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு எந்த வங்கிகளும் மற்றும் நுண்நிதி நிறுவனங்களும், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தவணைகளை அதிகப்படுத்தவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட கடனில் வாய்ப்பிருப்பின் கூடுதல் தொகை வழங்கவும், கடன் தொகையை திரும்பச் செலுத்தும் காலகட்டத்தை 12 மாதங்கள் வரை தள்ளி வைக்கவும் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.

கடன் தவணைகள் முறையாக செலுத்த விரும்பும் சுய உதவிக்குழு பயனாளிகளிடம் வங்கிகள் மற்றும் தனியார் நுண்நிதி நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் மூலம் கடன் தொகை வசூலிக்கும்போது எவ்வித நிர்பந்தத்திற்கும் உட்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

புகார் தரலாம்

மேலும், நுண்நிதி வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் மீது ஏதும் புகார் இருந்தால் பொதுமக்கள் 18001021080 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், 04146-223734 மற்றும் 9444094474 என்ற அலுவலக எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்