சிவகங்கை அரசு மருத்துவமனையில் - கரோனா வார்டு காவலாளிகளுக்கு ஓய்வு விடுப்பு நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணிபுரியும் காவலாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வு விடுப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதால் ஓய்வு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் அந்த நாட்களில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் காவலாளிகளுக்கு ஒருநாள் ஓய்வு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவலாளிகளுக்கு ஓய்வு விடுப்பு வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவலாளிகள் கூறுகையில், நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம். கரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஓய்வு விடுப்பு கொடுப்பதுடன் ஓய்வு அறைகளும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். ஆனால் நாங்கள் கரோனா வார்டில் பணிபுரிந்த பிறகு அப்படியே வீட்டுக்குச் செல்கிறோம். எங்களுக்கு வழங்கப்பட்ட ஒருநாள் ஓய்வு விடுப்பையும் தற்போது நிறுத்தி விட்டனர்.

எங்களுக்கு ஓய்வு அறை தராவிட்டாலும் பரவாயில்லை. ஓய்வு விடுப்பையாவது தருவதற்கு மருத்துவமனை டீன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்