திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களுக்கு 800 தடுப்பூசிகளை வழங்கிய விவகாரத்தில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநரை பணியிடை நீக்கம் செய்து பொதுசுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருப்பூரில் பொதுமக்களுக்கு செலுத்த வேண்டிய 800-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், பின்ன லாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி மீது மாவட்ட சுகாதாரத் துறை குற்றம் சாட்டியது.
மேலும் இது குறித்து விசாரிக்கப்படும் என, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கடந்த 8-ம் தேதி ’இந்து தமிழ்திசை’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக தீவிர விசாரணையும் மாவட்ட சுகாதாரத் துறை தரப்பில் தொடங்கியது. தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை ஆகியவற்றில், மாவட்ட சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருந்தாளுநரை தற்காலிக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுசுகாதாரத் துறை இயக்குநரகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட கரோனா தொற்று தடுப்பூசி மருந்தை, தனியார் செவிலியர்கள் மூலமாக தனியார் ஆடை நிறுவன ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டதாக எழுந்த செய்தியின் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறைதுணை இயக்குநர் விசாரணை செய்தார்.
தவறுதலாக தடுப்பூசி வழங்கிய மருந்தாளுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. மேலும், கண்காணிக்க வேண்டிய நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவ அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தொடர்புடைய தனியார் மருத்துவமனை கோவின் இணையதளத்தில் இருந்து (Co-WIN Portal) தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் கூறும்போது, ‘‘தடுப்பூசிகளை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து பெற்ற, அண்ணா நெசவாளர் காலனி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் பாலமுருகன் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அரசு மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் இன்றி தடுப்பூசி செலுத்தியது தொடர்பாகவும், மாநகராட்சி தரப்பிலும், அறிக்கை கேட்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago