ஊரடங்கால் மின் தேவை குறைந்ததால் - நீலகிரியில் மின் உற்பத்தி குறைப்பு :

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின்கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலம் 833.65 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுகிறது. தற்போது பெய்து வரும் மழையால், மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து 45 நாட்கள் மழை பெய்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளன. தற்போது, இந்த அணைகளில் 50 சதவீதம் மட்டுமே நீர் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்துக்கு 70 மெகா வாட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக வணிக வளாகங்கள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் தொழிற்சாலைகளின் இயக்கம் குறைந்துள்ளது.

மேலும்,சமவெளிப்பகுதிகளில் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்முடிந்துள்ளதாலும், மின்சார தேவை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மின் வாரிய அதிகாரிகள் கூறும் போது, ‘இந்த ஆண்டு கோடை மழை சரியாக பெய்யாத நிலையில், மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை பெய்தால் மட்டுமே அணைகளில் நீர்மட்டம் உயரும். நடப்பு ஆண்டு கோடை காலத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழிற்சாலைகள், பெரும் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன. இதனால், மின் தேவை வெகுவாக குறைந்தது. தற்போது கோடை காலமும் நிறைவடைந்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 300மெகாவாட்டாக குறைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்