காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்திமையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேவைப்படுகின்றன. இதனால், அரசு மருத்துவமனையில் இருந்த அனைத்து ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பின. சிலர் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது. தளர்வில்லா பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது. எனினும், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில், அவசர சிகிச்சை பகுதியில் உபயோகப்படுத்துவதற்காக ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எம்.சுதாகர், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago