குடும்ப அட்டையை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், புதிய குடும்ப அட்டை கோரி திருப்பூரில் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் போயம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் சாவித்திரி(35).கணவரை இழந்தவர். கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 10 மற்றும் 14 வயதில் இரு குழந்தைகள். இந்த நிலையில் இவர் பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக, புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு)கேட்டு விண்ணப்பித்துள்ளார். இவருக்கு புதிய குடும்ப அட்டை கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடையில்பொருட்கள் பெற்று வந்த சேந்தம்பாளையம் நியாய விலைக்கடையின் விற்பனையாளரிடம் பலமுறை கேட்டுள்ளார். அவர் தொடர்புடைய அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இவர் புதியஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளார். இணையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்த போது, ஏற்கனவே ஸ்மார்ட் குடும்ப அட்டை (எண்-333869465638) இருப்பதாககாண்பிக்கவே அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: கணவர் இல்லாத நிலையில், குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறேன். எனக்கு வந்துள்ள புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையை சிலர் தவறுதலாக பயன்படுத்தி 3 மாதங்கள் பொருட்கள் வாங்கியுள்ளனர். ஆகவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலர் வி.கணேசன் கூறியதாவது: பாதிக்கப்பட்ட நபர் தனது ஸ்மார்ட் கார்டு எண்ணுடன்,சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட கார்டு எண் தொடர்பாக, நியாய விலைக்கடைக்கு அறிவுறுத்தி, அவர்களுக்கு அந்த கார்டை பெற்றுதந்துவிடலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago