ஊரடங்கால் மல்லிகைப் பூ விலை சரிந்துள்ளதால், கிருஷ்ணகிரி பகுதி விவசாயிகள் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப் பட்டி, நாட்டாண்மைக்கொட்டாய், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப் பூ சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகை, சரக்கு வாகனங்களில் பெங்களூரு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு சென்று, ஏலமுறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தற்போது கரோனா பரவலைத் தடுக்க, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மல்லிகைப் பூ விலை வெகுவாக சரிந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நாட்டாண்மைக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கூறும்போது, பெங்களூருவில் காலை 6 மணி முதல் 10 மணி வரை பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து காலை 9 மணி வரை பறிக்கப்படும் மலர்கள் கிலோ ரூ.150 என்ற விலையில் கொள்முதல் செய்கின்றனர்.
காலை 9 மணிக்குப் பிறகு பூக்கள் இடைத்தரகர்கள் மூலம் பெங்களூரு, மேட்டு பாளையம், ஈரோடு வாசனை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கிறோம். வாசனை திரவிய தொழிற்சாலைகளுக்கு கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்கின்றனர். இந்த விலையால், தொழிலாளர்களுக்கு கூலி, வாகனங்களில் அனுப்பும் செலவு, பராமரிப்பு செலவு உள்ளிட்டவைக்கு போதுமானதாக இல்லை.
தற்போது ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி நிலையில் தவிக்கிறோம். எனவே, கிருஷ்ணகிரி அல்லது காவேரிப்பட்டணத்தை மையமாக வைத்து அரசு சார்பில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். இதன் மூலம் நாங்களே நேரடியாக தொழிற்சாலைகளுக்கு பூக்களை விற்பனை செய்ய முடியும். பூக்களுக்கு அடிப்படை நிர்ணய விலை கிடைக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago