திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வரும் 15-ம் தேதி முதல் 50 சதவீதம் தொழிலாளர்களைக் கொண்டு இயங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு சைமா அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக களப் பணியில் இறங்கிய முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். கடந்த ஆண்டு மார்ச்24-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை முழு ஊரடங்கால், தொழில்நிறுத்தப்பட்டது. மே 6-ம் தேதி வரை,50 சதவீத தொழிலாளர்களுடன்தொழில் தொடங்கி படிப்படியாக உற்பத்தியை அதிகரித்ததால், பொருளாதார இழப்பை ஓரளவுக்கு சரிகட்ட முடிந்தது.
நடப்பாண்டில், மே 14-ம் தேதி முதல் ஜூன் 14 வரை, முழு ஊரடங்கு காரணமாக தொழில் நிறுத்தப்பட்டது. எங்கள் சங்க உறுப்பினர்கள், முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.
திருப்பூர் பின்னலாடைத் தொழிலை ஏற்றுமதி உற்பத்தி என்றும், உள்நாட்டு உற்பத்தி என்றும் பிரித்துப் பார்க்க இயலாத ஒன்றாக அமைந்துள்ளது. தற்போது 10 சதவீதம் தொழிலாளர்களைக் கொண்டு தொழில் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தொழில்செய்யும் போது, உற்பத்தியாளர்களின் தேவை பூர்த்தியடையாது. மேலும் ஆய்வுக்கு வரும் அரசு அதிகாரிகளாலும் தெளிவான சூழ்நிலையை கணக்கில் எடுக்க முடியாது.
வரும் 15-ம் தேதி முதல் 50 சதவீதம் தொழிலாளர்களை கொண்டு, உற்பத்தியை தொடங்குவதும், படிப்படியாக தொற்றின் அளவுக்கு தகுந்தாற்போல் உற்பத்தியை அதிகரிக்கலாம் என கருதுகிறோம். இதனால் பொருளாதார இழப்பையும், தொழிலாளர்கள் திரும்பவும், தங்கள் சொந்த மாநிலம் அல்லது தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வதையும் தடுக்க முடியும்.
மேலும் வளாகத்துக்குள்ளேயே தங்கும் விடுதி, உணவு வசதி இருந்தாலும் கூட, அங்கும் 50 சதவீதம் பணியாளர்களை வைத்து தொழிலை தொடங்கினால் கூட போதும். அதற்கான அனுமதியையும் வழங்க வேண்டும். அரசு அறிவித்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எங்களது உறுப்பினர்கள் கடைபிடிப்பார்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago