கரோனா காலத்தில் கட்டாயமாக - கடன் வசூலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை : ஆட்சியர் ஜான் லூயிஸ் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஊரடங்கு நடவடிக்கையால் பொதுமக்கள் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வருமானம் இல்லாமல் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் தொழில் கடன், தொழில் சார்ந்த விவசாய கடன், வியாபார கடன், சுய உதவிக் குழு கடன் முதலான கடன்களுக்கு தவணை செலுத்த முடியவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் கட்டாய வசூல் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.

இதுதொடர்பாக, மாவட்ட அளவில் திட்ட இயக்குநர், முன்னோடி வங்கி மேலாளர், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மகளிர் குழுவினரின் கடன் திரும்ப செலுத்தும் கால அட்டவணையை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவன பணியாளர்கள், வெவ்வேறு இடங்களுக்கு சென்று வருவதால், அவர்கள் மூலம் தொற்று பரவவும் வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பான புகார்களுக்கு இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும்.

ஏதேனும் புகார்கள் எழும் பட்சத்தில், ஊரடங்கை மீறிய செயலாக கருதப்பட்டு, தொடர்புடைய அனைத்து தனியார் வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் கடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் 044-29991124, 9444094286 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்