அழகப்பா பல்கலை. மதிப்பெண் சான்றிதழில் - கோவிட்-19-ஐ குறிப்பிட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி :

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மதிப்பெண் சான்றிதழில் கோவிட் 19-ஐ குறிப்பிட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கவிருந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பரில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்நிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அந்த மதிப்பெண் சான்றிதழில் இறுதியாண்டு பருவத் தேர்வு கோவிட்-19 காரணமாக செப்டம்பரில் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில் கோவிட்-19-ஐ குறிப்பிட்டுள்ளதால் தங்களது மதிப்பெண்கள் தரம் குறையுமோ என மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக் கல்லூரி மாணவர்கள் சிலர் கூறியதாவது:

கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக தேர்வு நடக்காமல் மதிப்பெண் அளித்திருந்தால் கோவிட்-19 குறித்து குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், முறையாக தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளோம். எங்களது சான்றிதழ்களில் கோவிட் 19-ஐ பற்றி குறிப்பிடுவது தேவையில்லாதது. இதனால் மதிப்பெண் சான்றிதழை மாற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து கேட்பதற்காக அழகப்பா பல்கலைக்கழக தேர்வு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE