கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் நேற்று தருமபுரி மாவட்டத்தில் சாலைகளில் அதிக போக்குவரத்தைக் காண முடிந்தது.
கரோனா தொற்று இரண்டாம் அலை மிக வீரியமாக பரவி உடல்நலக் குறைவையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வந்தது. எனவே, தொற்று பரவலை தடுத்து உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு தமிழகம் முழுக்க முழு ஊரடங்கை அமல்படுத்தியது. மிக அத்தியாவசிய தேவைகளைத் தவிர இதர தேவைகளுக்காக யாரும் வெளியில் நடமாடக் கூடாது என அரசு அறிவித்திருந்தது. இரு வாரங்கள் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் வரும் 14-ம் தேதி வரை பல்வேறு புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை பின்பற்றுமாறு அரசு அறிவித்தது.
இந்நிலையில் 2 வாரங்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் நேற்று அதிக அளவில் வெளியில் வரத் தொடங்கினர். தருமபுரி நகரில் உள்ள பிரதான சாலை, இதர சாலைகள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் நடமாட்டத்தை அதிக அளவில் காண முடிந்தது. சாலைகளில் வழக்கம்போல் வாகனங்கள் இயங்கின. அதிக அளவில் மக்கள் வெளியில் நடமாடியதால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத நிலையை பல இடங்களிலும் காண முடிந்தது.
கடைகள் மட்டும் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜூன் 7-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று மளிகை, காய்கறி, இறைச்சி, மீன்கடைகள், புத்தகக்கடைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள் விற்பனை கடைகள் மட்டுமே திறந்திருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், சாலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. நடமாடும் கடைகள் மூலம் பொதுமக்கள் பொருட்களை வாங்கிவிடுவதால், மளிகை மற்றும் காய்கறிக் கடைகளில் கூட்டம் இல்லை. வழக்கம் போல ஓட்டல்கள் திறந்திருந்தன. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் ஓடின. தளர்வுகளைப் பயன்படுத்தி அவசியமின்றி மக்கள் வெளியில் வர வேண்டாம் என சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண் டுள்ளனர்.
சாலைகளில் மக்கள் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மளிகை, காய்கறிக் கடைகள், சாலையோரக் கடைகள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட்டிருந்தன.அரசு அலுவலகங்களும் 30 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கின. ஏற் கெனவே, பார்சல் விற்பனை அனு மதியுடன் செயல்பட்டு வந்த உணவகங்களும் செயல்பட்டதால், சாலைகள், கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் ஓரளவு அதிகரித்து இருந்தது. எனினும், நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. சிறு கடைகள் அனைத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டதால், அதிகரித்த மக்கள் நடமாட்டத்தை, போலீஸாரால் கட்டுப்படுத்துவதில் சிக்கல் எழுந்தது.எனினும், முக்கிய சாலை சந்திப்புகளில் தொடர்ந்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, மாவட்டங்களுக்கு இடையில் வாகன போக்குவரத்தில் இ-பதிவு முறை, ஏற்காடு செல்ல இ-பாஸ் நடைமுறையும் அமலில் உள்ளதால், மாவட்ட எல்லைகள், ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதியம் வரை மட்டுமே கடைகள் திறப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதுவணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில் இரு வாரங்களுக்குப் பின் கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. அதேபோல் சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது.
ஈரோட்டில் கூட்டமில்லை
ஈரோட்டில் காலை 6 மணி முதல் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், காய்கறிக்கடைகளைத் தவிர மளிகை உள்ளிட்ட பெரும்பாலான கடைகளில் கூட்டமின்றி காற்றாடியது. அதேநேரத்தில் வாகனங்களின் இயக்கம் அதிகரித்து காணப்பட்டது.அரசு அலுவலகங்களில் 30 சதவீத பணியாளர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் 50 சதவீதம் பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மூவர் மட்டுமே பதிவு மேற்கொண்டனர். நடமாடும் வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலமும் காய்கறி ,பழவகைகள், மளிகைப் பொருட்கள் வழக்கம் போல் விற்பனை செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago