வேலூரில் காய்கறி வியாபாரிகள் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

வேலூர் வளையல்கார தெருவில் நடை பாதை காய்கறி வியாபாரத்துக்கு அனுமதி அளிக்காததைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் சைதாப்பேட்டை வளையல்கார தெருவில் காய்கறி விற்பனை செய்யும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆற்காடு சாலையில் முருகன் கோயில் அருகே நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆற்காடு சாலையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்த தகவலின்பேரில் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கவிதா மற்றும் காவலர்கள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அப்போது, மறியலில் ஈடுபட்டிருந்த பெண்கள் கூறும்போது, ‘‘வளையல்கார தெருவில் பல ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். இடநெருக்கடி மற்றும் கரோனா தொற்று பாதிப்பால் கோடையிடி குப்புசாமி பள்ளி மைதானத்தில் கடைகளை வைத்து வியாபாரம் செய்ய கடந்த மாதம் அனுமதி வழங்கினர். ஊரடங்கு காரணமாக அங்கு கடைகள் இல்லாத நிலையில் தற்போது நடைபாதை கடைகளை வைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.

ஆனால், வளையல்கார தெருவில் மீண்டும் கடைகளை வைக்க மாகராட்சி அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால், எங்களுக்கு வருமானம் இல்லாமல் பாதிக்கிறோம். தோட்டப் பாளையம், சார்பனாமேடு பகுதிகளில் வழக்கம் போல் காய்கறி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்கின்றனர். எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக் கின்றனர்’’ என்றனர்.

இதையடுத்து, காவல் துறையினர் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். முடிவில், வளையல்கார தெருவில் கடைகளை வைத்துக் கொள்ள அனுமதி அளித்தனர். இந்த தகவலை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அந்த நேரத்தில் அங்கு வந்த ஆட்டோ ஒன்று கூட்டத்தில் நின்றிருந்த சிறுவன் மீது மோதியது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். விரைந்து சென்ற காவலர்கள் பொதுமக்களிடம் இருந்து ஆட்டோ ஓட்டுநரை மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்