தமிழகத்தில் கரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது : மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றின் வேகம்தமிழகத்தில் குறைந்துவரும் வேளையில், தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள், அதிகாரிகளுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், அங்குள்ள கரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி மற்றும் உதகை அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் மசினகுடி, செம்மநத்தம் பழங்குடியின கிராமங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய அனைத்து கிராமங்களிலும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 27,032 பழங்குடியின மக்கள்உள்ளனர். இவர்களில் 18 வயதுக்குமேற்பட்டவர்கள் 21,435 பேர். இவர்களில் 3,129 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இது 100 சதவீதம் என்ற நிலையைஎட்டினால், இந்திய அளவில் பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமை நீலகிரியைச் சேரும். இம்மாத இறுதிக்குள் இந்நிலையை எட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசிகள் வரவர, அனைத்துப் பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகின்றன.

இம்மாத இறுதிக்குள் 37 லட்சம் தடுப்பூசிகள் வர வேண்டியுள்ளன. நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. தமிழகம் முழுவதும் தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் படுக்கை வசதியுடன் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும், கிராமம்தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் வசதிகொண்ட வாகனமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வின்போது, சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்,மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கணேஷ், உதகை அரசு மருத்துவக் கல்லூரி டீன் மனோகரி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், திமுக மாவட்டச் செயலாளர்முபாரக் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்