தொழிலாளர்கள் நலனை கருத்தில்கொண்டு - பின்னலாடை நிறுவனங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்ய மா.கம்யூ. வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களை இயக்குவதற்கு அளித்த அனுமதியை, தொழிலாளர்கள் நலன் கருதி ரத்து செய்வதுடன், தளர்வு இல்லாத முழு ஊரடங்கை தொடர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடித விவரம்:

கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று பரவல் அதிகமுள்ள திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில், கட்டுப்பாடுகளுடன் சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்துவழங்கும் நிறுவனங்கள் ஏற்றுமதிஆணைகள் வைத்திருந்தால் 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

முழுமையான ஊரடங்கு தடை விதிக்கப்பட்டபோதே, திருப்பூர் வட்டாரத்தில் ஆங்காங்கு ஏற்றுமதிநிறுவனங்கள், ஜவுளி தொடர்பான ஆலைகள் சட்டவிரோதமாக இயக்கப்பட்டன. இந்நிலையில், 10 சதவீத தொழிலாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்களை இயக்கலாம் என்ற அரசின் அறிவிப்பை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, நிபந்தனைகளைப் பின்பற்றாமல் பரவலாக ஆலைகள் செயல்படத்தொடங்கிவிடும். இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவும் வேகம் குறையத் தொடங்கினாலும், பெரிய அளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடவில்லை. எனவே, தளர்வு இல்லாதமுழு ஊரடங்கை தொடர வேண்டியது அவசியம்.

தொழிலாளர்கள் நலன்கருதி, பின்னலாடை நிறுவனங்களை இயக்குவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவேண்டும். திருப்பூரில்நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிசெலுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்