செயற்கை முறை கருவூட்டல் மற்றும் கோமாரி நோய் தடுப்புதிட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கால்நடைமருத்துவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்நடை பராமரிப்புத் துறையில் மத்திய அரசு திட்டமான கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் கோமாரி நோய் தடுப்பு மருந்து செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் 2020-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின்படி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 350 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் பல்வேறுமுறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கால்நடை மருத்துவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கால்நடை உதவி மருத்துவர்கள் கூறியது: 2020-ம் ஆண்டு முதல் கோமாரி நோய் தடுப்பு மற்றும் செயற்கை முறை கருவூட்டல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 350 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதற்காக பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த சுமார் ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், போதிய அளவு விளம்பரம் செய்யாமல் போலியான நிறுவனத்திடமிருந்து கடிதம் பெற்று விளம்பரம் செய்ததாக கணக்கு காண்பித்து கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தடுப்பூசி போடப்பட்டதற்கான அத்தாட்சியை கணினியில் பதிவு செய்ய வேண்டும். அதற்காக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் நியமிக்கப்படவில்லை. மாறாக மருத்துவர்களையே பதிவேற்றம் செய்ய நிர்பந்தம் செய்தனர்.
மேலும், இந்தப் பணிக்கு ஒரு கால்நடைக்கு 2 ரூபாய் 50 காசு வழங்க வேண்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகியும் இந்த நிதி வழங்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்தும், காஞ்சி மண்டல இணை இயக்குநர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டரை பணி அமர்த்தாமல் உள்ளார். அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை இன்று வரை மருத்துவர்களுக்கு வழங்கவில்லை.
ஆய்வு என்ற பெயரில் மருத்துவர்களை பழிவாங்குவது போல கடந்த 2 மாத காலமாக இந்த செயல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய விசாரணை மேற்கொண்டு தவறுகள் இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரியநடவடிக்கை எடுத்து, கணினியில் பதிவேற்றம் செய்த மருத்துவர்களுக்கு, உரிய தொகையையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago