டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் 3 மாத காலமாக கெடமலை கிராம மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
ராசிபுரம் அருகே போதைமலையில் கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இதில் கெடமலை கிராமத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு விளையும் விளைபொருட்கள் ராசிபுரத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
பாதை வசதியில்லாததால் விளைபொருட்களை தலைச் சுமையாக கொண்டுவரும் பரிதாபம் இன்றளவும் நீடித்து வருகிறது. தவிர, மின்சார வசதியும் இல்லாமல் இருந்தது. கிராம மக்களின் தொடர் கோரிக்கையையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கெடமலை கிராமத்தில் மின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. இது கெடமலை கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கெடமலை யில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தது. இதனால் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் அளித்துள்ளனர். எனினும், சரியான பாதை வசதி யில்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை மின்மாற்றி சரி செய்யப்படாமல் உள்ளது.
இதனால் கெடமலை கிராம மக்கள் இருளில் மூழ்கி தவிக்கின்றனர். மின்வாரியத் துறையினர் கவனத்தில் கொண்டு பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை விரைந்து சரி செய்து மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago