ரேஷனில் இம்மாத பொருட்கள் வாங்கவே டோக்கன் விநியோகம் : கரோனா நிதி வழங்காததால் மக்கள் ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், மக்களின் நலன் கருதி ரேஷன் கடைகள் பகல் 12 மணி வரை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கரோனா நிவாரண நிதிக்காக கடந்த மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகித்து, கடைகளில் பணம் வழங்கப்பட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இம்மாதமும் ரேஷன் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கினர்.

அந்த டோக்கன்கள் மூலம் இம்மாதத்துக்கான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. கரோனாநிதி மற்றும் தமிழக அரசு அறிவித்தஇலவச பொருட்கள் வழங்கப்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ரேஷன்கடை ஊழியர்கள் இம்மாதத்துக்கான பொருட்கள்வாங்க விநியோகித்த டோக்கனில் கரோனா நிதி மற்றும் இலவச பொருட்கள் வழங்க தேதியை திருத்திக் கொடுத்தனர்.

ரேஷன் கடை ஊழியர்கள் கூறும் போது, ‘முழு ஊரடங்கு காரணமாக ரேஷன் கடைகளைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதாக கூறி வெளியில் சுற்றித் திரிகின்றனர். இதை தவிர்க்க இம்மாதம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க டோக்கன் விநியோகிக்கப்படுகிறது.

டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே மக்கள் பொருட்கள் வாங்க கடைகளுக்கு வர வேண்டும் என்பதற்காக டோக்கன்வழங்கப்பட்டது. கரோனா நிதி இரண்டாம் தவணை மற்றும் இலவச பொருட்கள் பின்னர்வழங்கப்படும்’ என்றனர்.

கோவையில் ரேஷன் கடைகளில் அரசின் மளிகைப்பொருட்கள் தொகுப்பு வழங்கப்படாததால் அவற்றை வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் கூறும்போது, ‘‘அரசு வழங்கும் மளிகைப் பொருட்கள் இன்னும் வந்து சேரவில்லை.எனவே, மளிகைப்பொருட்கள் வழங்கும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொருட்கள் வந்தவுடன் விநியோகம் தொடங்கும். அத்துடன், ரூ.2,000- கரோனா நிவாரண நிதியும் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். மற்ற பொருட்கள் ரேஷன் கடைகளில் வழக்கம்போல வழங்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்