கரோனா மருந்துகள் வழங்குவதில் பாரபட்சம் : கிடங்கு மருந்தாளுநர் மீது குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்துள்ள 11 மாவட்டங்களில் திருப்பூரும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா நோயாளிகளுக்கு உரிய மருந்து அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யும் மருந்தாளுநர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய புகார் கடித விவரம்:

காங்கயம் அருகே குள்ளம்பாளையத்தில் தமிழ்நாடு மருத்துவசேவைக் கழகத்தின் மருந்து கிடங்கு உள்ளது. திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உட்பட மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், இஎஸ்ஐ மருந்தகங்களுக்கு இங்கிருந்துதான் மருந்தாளுநர் மூலம் மருந்துகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

தற்போது கரோனா தொற்று உச்சத்தில் இருப்பதால், நோய் தடுப்பு மருந்துகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.

அசித்ரோமைசின், அஸ்கார்பிக், ஜிங், மல்டி வைட்டமின், ஐவர்மெக்சின், டாக்சிலின், செட்ரிசின், கால்சியம் உள்ளிட்ட மாத்திரைகளும், டெக்சா மீத்தோசேன், ஹெப்பாரின், ரெம்டிசிவர்,ஹைட்ரோகோர்டிசோன் போன்றஊசி மருந்துகளும் மருத்துவமனைகளுக்கு அதிகமாக தேவைப்படுகின்றன.

மேற்கண்ட மருந்துகளைதேவைப்பட்டியலில் குறிப்பிட்டு, அவற்றை அனைவருக்கும் அளிக்கும் படி கேட்டால், உங்களுக்கு தரக்கூடிய பட்டியலில் இல்லை என்று கூறி தர மறுக்கிறார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில்மிகக்குறைவான கரோனா மருந்துகள் பெறப்பட்டு நோயாளி களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கரோனா பரவல் மற்றும் இறப்புகளை குறைக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம். தேவையில்லாத மருந்துகளை கட்டாயப்படுத்தி கொடுப்பது என அவரது செயல்பாடு தன்னிச்சையாக உள்ளது.

மருந்துகள் வழங்குவதில் பாரபட்சமாக செயல்படுகிறார். இவரது செயல்பாடுகள் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இவரை பணியிடமாற்றம் செய்து, பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கடிதத்தில்குறிப்பிட்டுள்ளனர். திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறும்போது, "இந்த புகார் குறித்து விசாரிக்கிறேன்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்