கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் - வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று வேளாண் சட்ட நகலெரிப்பு போராட்டம் நடை பெற்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு இதே நாளில் வேளாண் சட்டங்கள் திருத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஓர் ஆண்டு கடந்த நிலையில் இந்த நாள், அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வேளாண் சட்ட நகலெரிப்பு போராட்டமாக நேற்று நடைபெற்றது. மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, மின்சார திருத்த சட்டத்தை கைவிடுவது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஊத்துக்குளி வட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ்.பேருந்து நிறுத்தப் பகுதியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் தலைமையில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்தாலுகா செயலாளர் வி.கே.முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு முன்பும் போராட்டம் நடைபெற்றது.

கோவை

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற சட்ட நகல் எரிப்பு போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி தலைமை வகித்தார். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களது வீடுகளின் முன் சட்ட நகல்களை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

உடுமலை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தாராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வேளாண் சட்ட மசோதாவை கிழித்து நேற்று போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் நிர்வாகிகள் மதுசூதனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் பாலதண்டபாணி உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட குழு உறுப்பினர் சவுந்திரராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்