திருவள்ளூர் - மணவாளநகரை இணைக்கும் பாலத்தின் - படிக்கட்டுகளை சீரமைத்து, மின்வசதி ஏற்படுத்த கோரிக்கை : பராமரிப்பு இல்லாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவலம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர், மணவாள நகரை இணைக்கும் மேம்பாலத்தின் அடியில் உள்ள படிக்கட்டுகள் பராமரிப்பின்றி உள்ளதால், பொதுமக்கள் அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.

மாவட்ட தலைநகரான திருவள்ளூரையும், மணவாளநகரையும் இணைக்கும் வழியின் குறுக்கே கூவம் ஆறு ஓடுகிறது. அத்துடன், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் செல்வதற்கான ரயில் பாதையும் உள்ளது. இதனால், பொதுமக்கள் திருவள்ளூரில் இருந்து மணவாளநகருக்குச் செல்வதற்கு வசதியாக கூவம் ஆறு,ரயில் பாதை மீது பாலம் அமைக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்தப் பாலம் சேதம் அடைந்ததையடுத்து, கடந்த2005-ம் ஆண்டு புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது.

இப்பாலத்தை ஒட்டியுள்ள வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் ரயில் பாதையைக் கடப்பதற்கு வசதியாக இப்பாலத்தின் மீது ஏறி செல்வதற்கு வசதியாக, பாலத்தின் இருபுறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.

ஆனால், இப்படிக்கட்டுகள்முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால், இப்படிக்கட்டைச் சுற்றிலும் முட்புதர்கள் மண்டியுள்ளன. அத்துடன், படிக்கட்டில் போதிய மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால், பொதுமக்கள் இப்படிக்கட்டைப் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் அரக்கோணம், திருத்தணி, திருவாலங்காடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ரயில் மூலம் திருவள்ளூர் வருகின்றனர்.

பின்னர், அங்கிருந்து இப்பாலத்தின் மீது ஏறி சென்று, அவ்வழியாக வரும் தொழிற்சாலை பேருந்துகளில் ஏறி பணிக்குச் செல்கின்றனர். தற்போது, இப்பாலத்தின் படிக்கட்டுகள் முறையாக பராமரிக்கப்படாததால், அவர்கள் இப்பாலத்தைப் பயன்படுத்த தயங்குகின்றனர்.

மேலும், இப்பாலத்தின் அடியில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன. இதனால், பகல் நேரத்தில் கூட பெண்கள் இப்பாலத்தின் படிக்கட்டுகளை பயன்படுத்த அஞ்சுகின்றனர். எனவே, இப்பாலத்துக்குச் செல்லும் வழியைசீரமைப்படுவதோடு, படிக்கட்டுகளில் வர்ணம்பூசி சீரமைப்பதோடு, போதிய மின்விளக்கு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE