ராணிப்பேட்டை மாவட்டத்தில் - நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீடு :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்துக்காக ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளதால் வேளாண் அலுவலர் களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த 2021-22 நிதியாண்டுக்கு ரூ.12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாலாறு, பொன்னை, கொசஸ்தலை ஆறு பாசன பகுதிகள் தவிர பிற பகுதிகள் மானாவாரி மற்றும் தோட்டக்கால் பகுதியாகும்.

நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் பயிர் செய்யலாம். இதனால், 70 சதவீதம் வரை நீரை சேமிக்க முடியும்.

நீரில் கரையும் உரங்களை சொட்டுநீர் பாசனம் மூலம் இடுவதால் உரச்செலவு குறையும். தண்ணீர் பயிர்களின் வேர்களுக்கு அருகாமையில் விழுவதால் தேவையற்ற களைகள் வராமல் தடுக்கப்படுவதோடு மண் இறுக்கமும் குறைந்து மண்ணில் காற்றோட்டம் ஏற்படுகிறது. நுண்ணீர் பாசனம் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் இறவை பயிர்களும், 11,800 ஹெக்டேர் பரப்பில் மானாவாரி பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இறவை பயிர்களின் மகசூலை அதிகரிக்கவும், மானா வாரி நிலங்களை இறவைக்கு கொண்டு வரும் வகையில் கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு தெளிப்புநீர் பாசன மும் அமைக்கலாம். மேலும், மழை தூவுவான் உள்ளிட்ட கருவிகளை அமைத்து பயன்பெறலாம்.

100 சதவீதம் மானியம்

இந்தத் திட்டத்தில் பங்கு பெறும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. புதிதாக மின் இணைப்பு பெற்று நுண்ணீர் பாசனம் பெறும் விவசாயிகளுக்கு மின் மோட்டார், பிவிசி பைப்புகள், தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத் திட மானியம் வழங்கப்படுகிறது.

சொட்டு நீர் பாசன குழாய்கள் பதிப்பதற்கான பள்ளம் தோண்ட ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் இரண்டு ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், 2 புகைப்படம், சிறு, குறு விவசாயிக்கான சான்று, மண் மற்றும் நீர் மாதிரி ஆய்வு முடிவு அறிக்கை ஆகியவற்றுடன் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகி பயன்பெறலாம்’’ என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்