தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான உரிய தகவல்களை முறையாக தெரிவிக்காததால், பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளதாக, மாநகராட்சி சுகாதாரத் துறை மீது பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருவதால், தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது. தடுப்பூசி ஒதுக்கீடுசெய்யப்பட்டு, மாவட்டத்துக்கு வர வர பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆரம்பசுகாதார நிலையம், கல்லாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என சில இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி செலுத்த மேற்கண்ட பகுதிகளிலும் நேற்று பொதுமக்கள் திரண்டனர்.
இதுதொடர்பாக திருப்பூர் -மங்கலம் சாலையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கூறும்போது,"சுண்டமேடு பகுதியிலும் 300 பேருக்கு மேல் காத்திருக்கின்றனர். ஆனால், குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்த டோக்கன் வழங்கப்பட்டது.
குளத்துப் பாளையத்தில் 500 பேர்தடுப்பூசிசெலுத்த நிற்கிறார்கள்.ஆனால், 150 டோக்கன் மட்டும்வழங்கப்படுகிறது. எஞ்சியவர்கள் அதிகாலை முதல் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.
இதேபோல, லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் திருப்பூர் மாநகரில், எந்தெந்த பகுதியில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதைக்கூட மாநகராட்சியின் சுகாதாரத் துறை முறையாக வெளிப்படுத்தாமல் இருப்பது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், தினமும் தடுப்பூசி செலுத்த காத்திருந்து, ஆயிரக் கணக்கானோர் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை நிலவுகிறது.
இதுதொடர்பாக மாநகர சுகாதாரத் துறை அலுவலர்களும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, தடுப்பூசி செலுத்தும் இடங்கள் தொடர்பான தகவல் களை, பொதுமக்களுக்கு மாநகராட்சி சுகாதாரத் துறை தெரிவிக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago