குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் கரோனா தடுப்பூசி மருந்தை பேக்கிங்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் கரோனா கட்டுப்பாடு ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கரோனா காலத்தில் மக்களுக்குத் தேவையான உதவிகளை எளிதில் கிடைக்கச்செய்யவும், உளவியல் ஆலோசனை வழங்கவும் 1800 425 0262 என்ற 24 மணிநேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு 12 வகையான பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட தொற்றாளர்களுக்குத் தேவையான மருந்து பெட்டகத்தையும் வழங்கினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
கரோனா 2-வது அலையின் தொடக்கத்தில் தமிழகத்தில் இருந்த ஆக்சிஜன் படுக்கைகள் பற்றாக்குறை, தற்போது இல்லை. இ-பதிவு மூலம் சிலர் எளிதாக உதகைக்கு வந்து அனுமதியின்றி தங்குகின்றனர்.
இதைத் தடுக்க இ-பாஸ் நடைமுறையைக் கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது. கருணாநிதி பிறந்த நாளன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கிய 16 பொருட்கள் அடங்கிய தொகுப்பில்ஊட்டி டீத்தூளும் சேர்க்கப்பட்டுள்ளது. இண்ட்கோ சர்வ் தேயிலை நிறுவனம் சார்பில் 4,000 டன் தேயிலைத் தூள் கொள்முதல் செய்யப்பட்டு, பாக்கெட்களாக சேர்க்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசிமையத்தை தனியாரிடம் மத்திய அரசு ஒப்படைத்தாலும், தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசி மருந்தை கொடுத்தபின்பே மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகத்தில் கரோனா தடுப்பூசி மருந்து பேக்கிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.கணேஷ், பொன்.ஜெயசீலன் உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago