காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வார்டை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகம் இருந்தது. இதனால் மருத்துவமனைகளில் இடமில்லாத சூழல் நிலவியது. கரோனா பொது முடக்கத்துக்கு பிறகு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும்திடீரென்று இதன் தாக்கம் அதிகரிக்கும்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் லேசான அறிகுறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க மருத்துவமனை தவிர்த்து வெளியிடங்களில் கரோனா சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் விளையாட்டு அரங்கில் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் லேசான அறிகுறிகளுடன் இருக்கும் கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கரோனா சிறப்பு வார்டை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, மக்களவைஉறுப்பினர் செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ஜீவா உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago