முத்தரப்பு கூட்டம் நடத்தியும் மா விவசாயிகளுக்கு பயனில்லை - விலையின்றி சாலையோரம் வீசப்படும் மாங்காய்கள் :

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரியில் முத்தரப்பு கூட்டம் நடத்தியும் மா விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை எனவும், போதிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களை விவசாயிகள் சாலையோரம் வீசிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் மாங்காய்களை சாலையோரம் வீசிச் சென்றனர். இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து மா விவசாயி களின் கூட்டமைப்பு தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மே 21-ம் தேதி நடந்த முத்தரப்பு கூட்டத்தில், 5 கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. அதில், கடும் பனி மற்றும் புதிய வகை பூச்சி தாக்குதல் போன்றவற்றால் மாம்பூக்கள் முழுவதும் கருகி மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40ஆயிரம் வரை முதலீடு செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

மா மகசூல் கடுமையாக பாதித்துள்ள சூழ்நிலையில், மா விவசாயிகளுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். உரம், பூச்சிக் கொல்லி மருந்து கடைகள் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்கின்றனர். அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதைத் தடுக்க வேண்டும். பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மா பருவ காலத்தில் வரும் முன் காப்போம் என்ற நிலையில், விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி மானிய விலையில் பூச்சி கொல்லி மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களை பாதுகாப்பது போல், மா விவசாயிகளையும் பாதுகாக்க ஒன்றியம்தோறும் 2 மாங்கூழ் தொழிற்சாலை அமைத்து, மா உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு கூட்டம் நடந்து பல நாட்கள் கடந்தும் விவசாயிகளுக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. விவசாயிகளின் விளைபொருள், விலையில்லா பொருள் ஆக்கப்பட்டது. எனவே, மா விவசாயிகளுக்கு நிவாரணமும், உரிய விலையும் கிடைக்க தமிழக முதல்வர் உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்