மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்காவிட்டால், காவிரி ஆணையத் தலைவர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, திருவாரூரில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவை நேற்று சந்தித்து மனு அளித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி விவகாரத்தை பொறுத்தவரை தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி ஆணையத்தை முதன்மைப்படுத்திதான் தமிழக அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே காவிரி ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் காவிரி ஆணையம் செயல்படுவதால், காவிரி தொடர்பான கோரிக்கைகளை மத்திய அரசிடம் கேட்பது பொருத்தமில்லை.
தமிழகத்தின் காவிரி உரிமையை பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு காவிரி ஆணையத் தலைவருக்கு உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஆணையத்தின் கூட்டம் நடைபெறவில்லை.
தற்போது, மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், காவிரி ஆணையத்தைக் கூட்டி, கர்நாடகாவிடம் இருந்து மாதாந்திர அடிப்படையில் காவிரியில் தண்ணீரை கேட்டுப் பெற வேண்டும்.
மேலும், மேகேதாட்டுவில் கர்நாடக அரசு கட்டிவரும் அணையை காவிரி ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
தவறும்பட்சத்தில் காவிரி ஆணையத் தலைவர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். தமிழக அரசு வழக்கு தொடர தாமதித்தால், விவசாயிகள் சார்பில் வழக்கு தொடரப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago