வேலூர் மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி வரை விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மண் மாதிரிகளை சேகரிக்கும் முகாம் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், மண் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து உடனுக்குடன் ஆய்வு அறிக்கை வழங்கப்படவுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மானாவாரி பயிர் சாகுபடிக்கு முன்பாக மண் பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனை முடிவின்படி உரமிட்டால் செலவு குறையும். பூச்சி நோய் தாக்குதல் குறையும். மண் பரிசோதனை ஒன்றுக்கு கட்டணம் ரூ.20 வசூலிக்கப்படும். ஓர் ஏக்கருக்கு 10 முதல் 12 இடங்களில் ஆங்கில எழுத்து ‘வி’ வடிவக் குழிகள் அரை அடி முதல் முக்கால் அடி ஆழத்துக்கு தோண்டி அந்த குழியின் பக்கவாட்டில் உள்ள மண்ணை அரை அங்குலத்துக்கு மேல் இருந்து கீழாக சேகரிக்க வேண்டும்.
அந்த மண்ணை கற்கள், வேர் உள்ளிட்டவற்றை நீக்கி அரை கிலோ அளவுக்கு ஒரு துணிப்பையில் போட்டு அதில் விவசாயியின் பெயர், முகவரி, பயிர் சாகுபடி பயிர் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலரிடம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago