வேலூரில் பிரபல உணவு விநியோக நிறுவன ஊழியர் சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்ய முயன்றாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் உட்கோட்டத்தில் உள்ள அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான காவலர்கள் சிவநாதபுரம் கிராமத்தில் சாராய ஒழிப்பு பணிக்காக நேற்று முன்தினம் காலை சோதனைக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள மலையடிவாரத்தில் நின்றிருந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அப்போது, பிரபல உணவு விநியோக நிறுவனத்தின் டி-ஷர்ட், பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து தனியாக விசாரித்தனர்.
அதில், அவர் காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்த விஷ்ணுராம் (31) என்றும் சாராய பாக்கெட் வாங்க வந்ததாகவும், உணவு விநியோக நிறுவன உடை அணிந்து வந்ததால் காவல் துறையினர் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, அவரது முகவரி மற்றும் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், உணவு டெலிவரி ஊழியர் உண்மையில் அவருக்காக சாராய பாக்கெட் வாங்க வந்தாரா? அல்லது வேறு யாருக்காவது வாங்கிச் சென்று விற்பனை செய்ய முயன்றாரா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று உத்தர விட்டார்.
இதையடுத்து, அவர் அளித்த முகவரியில் அரியூர் காவல் நிலைய காவலர்கள் விசாரணைக்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த பெயரில் யாரும் இல்லை என தெரியவந்தது.
அவர் போலியான முகவரியை கொடுத்தாரா? என்ற சந்தேகத்தில் அவர் அளித்த செல்போன் எண் மற்றும் புகைப்படத்தை வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago