தி.மலை இடுக்குபிள்ளையார் கோயில் தெரு பகுதியில் குறைந் தழுத்த மின்சாரம் வழங்கப்படு வதை கண்டித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
தி.மலை வேங்கிக்கால் இடுக்கு பிள்ளையார் கோயில் தெருக்கள் உள்ள பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குறைந்தழுத்த மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், மின்னணு சாதனப் பொருட்கள் பழுதடைந்துள்ளன. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இடுக்கு பிள்ளையார் கோயில் தெரு பகுதி மக்கள், வேங்கிக்காலில் (வேலூர் சாலை) உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவல கத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “எங்கள் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தழுத்த மின்சாரம் வழங் கப்பட்டு வருகிறது. இதனால், வாஷிங் மிஷின், பிரிட்ஜ், ஏசி, டிவி, மிக்ஸி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காராணமாக தகவல் தொழில்நுட்ப பணியில் உள்ளவர் கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், குறைந்தழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால், மோடமும் பழுதடைந்துவிடுகிறது. இதனால் எங்களுக்கு செலவு அதிகரித்து வருகிறது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அலுவல கத்தில் புகார் தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். எங்கள் பகுதியில் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதையடுத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மின் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், குறைந்தழுத்த மின்சாரத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்தனர்.
பின்னர், சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையேற்று, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து, இடுக்கு பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி அமைக்க ஆலோசித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago