தேயிலைச் செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் : மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் நிழல் மரங்களின் எண்ணிக்கையும் குறைந்த நிலையில், தேயிலைச்செடிகளில் முதிர்ந்த இலைகளின் அடியில் சிவப்பு சிலந்தி தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் குறைந்துள்ளது.

இதுகுறித்து நெலிகொலு சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்க நிறுவனத் தலைவர் பி.எஸ்.ராமன் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இதில், குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பனியின் தாக்கம், மழையின்மை காரணமாக தேயிலை மகசூல் குறைவது வழக்கம். தற்போது, சிவப்பு சிலந்தி தாக்குதலால் தேயிலைச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தேயிலை இலைகள் சிவப்பு நிறமாக மாறியுள்ளன. தென்மேற்குப் பருவ மழை பெய்ய தொடங்கினால்தான் சிவப்பு சிலந்தி தாக்குதல் குறைந்து தேயிலைவரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிவப்பு சிலந்தி தாக்குதல் காரணமாக மகசூல் குறைந்ததால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றார்.

சிலந்திப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘தேயிலைச் செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதலைகட்டுப்படுத்த, சல்பர், ப்ராபார்கேட்,பாரபீனிக் ஆயில் பயன்படுத்துவது அவசியம்.

வேர்களின் வளர்ச்சிக்கு, மணிச்சத்து உரத்துடன், முசூரி பாஸ்பேட், ராக் பாஸ்பேட், சிட்ரிக் அமிலத்துடன் கலந்து தழைச் சாம்பல் உரக்கலவையுடன் வீச்சு முறையில் இட வேண்டும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இலைகளின் நீராவிப் போக்கை கட்டுப்படுத்தி, வறட்சியின் பாதிப்பைத்தாங்க, உரம், யூரியா, மூரியேட் ஆப் பொட்டாஷ், கிரீன் மிராக்கிள் ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து தெளிக்க வேண்டும். இதனால் சிவப்பு சிலந்தி தாக்குதல்குறையும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்