பிஏபி திட்டத்தில் பாசனமில்லாத பகுதிகளுக்கு முறைகேடாக தண்ணீர் கொண்டு செல்லப்படுவது குறித்து வருவாய்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோரியுள்ளோம் என திருப்பூர் மாவட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. நீர் மேலாண்மை திட்டத்தை முறையாக கடைபிடிக்காததும், வணிக பயன்பாட்டில் உள்ள நிலங்களை மதிப்பிட்டு நீக்கம் செய்யப்படாததும் தான் இப்பிரச்சினைக்கு காரணம் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என பலதரப்பிலும் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிஏபி பாசன விவசாயிகள் நல சங்க செயலாளார் விவேகானந்தன் கூறியதாவது:
பிஏபி ஆயக்கட்டில் உள்ள 3,77,152 ஏக்கரில், 7,581 ஏக்கர் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு, அதில் 3,462 ஏக்கர் நிலங்கள் பிஏபி பாசன நீரை பயன்படுத்துவதில்லை என வருவாய்துறை மூலம் தெரியவந்துள்ளது. திருமூர்த்தி கோட்ட பொறியாளரின் ஆளுகைக்கு கீழ் உள்ள சுமார் 2 லட்சம் ஏக்கர் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இதனால் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைப்பதில்லை. ஆனால் ஆயக்கட்டு முழுவதும் பாசனம் நடைபெறுவதாக அரசுக்கு தவறான அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதுகுறித்த ஆவண சாட்சியங்களோடு திருப்பூர் மாவட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு டிஎஸ்பி தட்சிணாமூர்த்தியிடம் கேட்டபோது, ‘பாதிக்கப்பட்ட விவசாயிகள் அளித்த புகார் மனு மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பாசனமில்லாத பகுதிகளுக்கு முறைகேடாக தண்ணீர் கொண்டு செல்லப்படுவது மற்றும் வாய்க்கால் கரையோரங்களில் கிணறுகள் வெட்டி அதன் மூலம் தண்ணீர் எடுப்பது போன்ற சம்பவங்கள் குறித்து வருவாய்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோரியுள்ளோம். அவை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago