பட்டாக் கத்தியுடன் - சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது :

By செய்திப்பிரிவு

திருப்பூரில் பட்டாக் கத்தியுடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் தெற்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பெரியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஏ.பீர் முகமது (20), இவரது நண்பர் ரகுமான் (எ) அப்பாஸ் (21). இருவரும் சமீபத்தில் கத்தி மற்றும் பட்டாக் கத்தியுடன் பாட்டு பாடி, நடனம் ஆடி பொதுமக்களை மிரட்டும் வகையில் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர்.

பட்டாக் கத்தியுடன் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து அறிந்த அப்பகுதிக்கான சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவுடன் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

பிறகு இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்ப சட்டம், ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பீர் முகமது மற்றும் ரகுமான் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் தாராபுரம் கிளை சிறையில் 2 பேரையும் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, 'இருவரும் சுய விளம்பர நோக்கில் இவ்வாறு செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் இதுபோன்று வீடியோக்களை தயார் செய்து பதிவேற்றம் செய்யும் தவறான சிந்தனை இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது. இவ்வாறு செய்வதால் பின்விளைவுகளை எதிர்கொள்ளப் போவதும் அவர்கள் தான். எனவே இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும், 'என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்